அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஒரு புகழ்பெற்ற சட்ட நிறுவனத்தில் மூத்த குடிவரவு வழக்கறிஞராக உழைத்த கெவின் ஆண்ட்ரூஸ், ஒரு திங்கட்கிழமை காலையில் வந்த ஒற்றை மின்னஞ்சல் (Email) மூலம் திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டார்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அவர் வெளிப்படையாக ஆதரித்ததும், லிங்க்ட்இன் (LinkedIn) பக்கத்தில் அவர் வெளியிட்ட AI பணிப்பாய்வு பதிவுகள் இணையத்தில் வைரலானதும் தான் அந்த நிறுவனத்திற்குப் பிடிக்காமல் போனது.

கையில் போதிய சேமிப்பு இல்லை, இரண்டு குழந்தைகள், கூடவே ஒரு மனநல மருத்துவமனையை ஆதரிக்க வேண்டிய குடும்பச் சுமை, அடுத்த கட்ட பிளான் எதுவுமே இல்லாத உச்சகட்ட நெருக்கடி! ஆனால், சோர்ந்து உட்காராமல், தான் கற்றுக்கொண்ட AI தொழில்நுட்பத்தையே தனது ஆயுதமாக மாற்றினார் கெவின். ‘வைப் கோடிங்’ (Vibe Coding) முறையைப் பயன்படுத்தி, கோடிங் பின்னணி எதுவுமே இல்லாமல் கிளாட் (Claude) மற்றும் சாட்ஜிபிடி (ChatGPT) உதவியுடன் பல AI “துணை முகவர்களை” உருவாக்கினார்.

விளைவு? வெறும் 48 மணி நேரத்திற்குள் காப்பீடு பெற்று, அறக்கட்டளைக் கணக்குகளைத் தொடங்கி, ‘கெவின் ஜே. ஆண்ட்ரூஸ் லா’ என்ற சொந்த சட்ட நிறுவனத்தையே அமைத்து மாஸ் காட்டினார்! ஒரு வாரத்திற்குள் தனது முதல் வாடிக்கையாளரையும் பெற்று, சாதனைப் பயணத்தைத் தொடங்கினார்.

இதற்கிடையே, டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் EB-1A விசா நிராகரிப்பு விகிதங்கள் சமீப காலங்களில் இருமடங்காக உயர்ந்துள்ள சூழலில், கூகுள் ஸ்காலர் தரவுகள் மற்றும் நிர்வாக மேல்முறையீட்டு அலுவலக முடிவுகளைச் சேகரிக்கும் AI கருவிகளைப் பயன்படுத்தி இந்திய H-1B மற்றும் EB-1A விண்ணப்பதாரர்களுக்கு மிகத் துல்லியமான சட்ட உத்திகளை வகுத்து வழங்கி வருகிறார் கெவின்.

“விண்ணப்பங்களில் வெறும் கதைகளை எழுதாமல், புள்ளிவிவரங்களையும் அளவீடுகளையும் காட்டுங்கள்” என இந்தியர்களுக்கு அறிவுரை கூறும் அவர், AI-ல் இருக்கும் மிகப்பெரிய ஆபத்தான ‘மாயத்தோற்றங்களை’  கண்டறிய ‘மாயத்தோற்றச் சரிபார்ப்பு அடுக்கு’ என்ற தனி அமைப்பையும் உருவாக்கி அசத்தியுள்ளார்.

“AI ஒருபோதும் வழிகாட்டி அல்ல, அது நம்மை மேம்படுத்தும் ஒரு கார் போன்றது; அதை இயக்குவதில் தொழில்நுட்பத் தடையை விட உளவியல் தடையே அதிகம்” என்று கூறும் கெவின், “திங்கட்கிழமை காலை உங்களுக்கு வேலை நீக்க மெயில் வரும் வரை காத்திருக்காமல், இப்போதே AI தொழில்நுட்பத்தைக் கற்கத் தொடங்குங்கள்” என உலகெங்கும் உள்ள நிபுணர்களுக்கு அதிரடி உத்வேகம் கொடுத்துள்ளார்!