‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘ஷாஜகான்’, ‘கோ’ உட்பட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகை சோனா, சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் வாடகைக்கு வீடு கிடைக்காமல் சென்னை நகரில் எதிர்கொண்ட கஷ்டங்களைப் பற்றி வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
சினிமாவில் கவர்ச்சி நடிகை என்கிற அடையாளம் தனக்கு இருந்த காரணத்தால், மாதம் 1 லட்சம் ரூபாய் வரை வாடகை கொடுக்கத் தயாராக இருந்தும் பல வீட்டு உரிமையாளர்கள் தனக்கு வீடு கொடுக்க மறுத்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
இது ஒரு கண்ணியமான குடியிருப்புப் பகுதி என்று கூறி, தனது திரை பிம்பத்தை வைத்துப் பலர் தன்னைத் தவறாக எடைபோட்டு வீட்டைத் தர மறுத்தது தன் வாழ்வில் மிகப்பெரிய சவாலாக இருந்தது என்று சோனா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
தற்போது தனக்கு ஐந்து படுக்கையறைகள் கொண்ட ஒரு பெரிய இரண்டு மாடி சொந்த வீடு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள சோனா, அந்த வீட்டில் தனியாக வாழும் அனுபவம் பற்றியும் பேசியுள்ளார்.
தனது பெற்றோர் உயிருடன் இல்லாததாலும், கணவர் அல்லது துணை என்று யாரும் இல்லாததாலும், சகோதரி லண்டனில் வசிப்பதாலும் இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருப்பது மனதளவில் மிகவும் கடினமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந்தத் தனிமை உணர்வு காரணமாகவே தான் வேறு வீட்டிற்கு மாறுவதைப் பற்றி யோசித்ததாகத் தெரிவித்துள்ள சோனா, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல விஷயங்களை எந்தவித ஒளிவுமறைவும் இன்றி இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
