ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியடைந்து வெளியேறியது குறித்து, இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் (96 ரன்கள்) அதிரடியால் 214 ரன்கள் குவித்த போதிலும், குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லின் (104 ரன்கள்) அசுர சதத்தால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த அதிர்ச்சி தோல்வி குறித்துப் பேசிய சேவாக், அகமதாபாத் மைதானத்தின் தன்மையை உணராமல், டாஸ் வென்றவுடன் முதலில் பேட்டிங் செய்ய எடுத்த முடிவே ராஜஸ்தான் அணியின் கோப்பை கனவை தகர்த்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இப்படியொரு முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற பிறகு முதலில் பேட்டிங் செய்ய எடுத்த முடிவு மிகவும் மோசமானது. ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் மற்றும் பயிற்சியாளர் குமார் சங்ககாரா ஆகிய இருவரும் ஆடுகளத்தின் தன்மையைசரியாகக் கணிக்கத் தவறிவிட்டனர். இத்தகைய பிட்ச்களில் முதலில் பேட்டிங் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை இந்த இமாலயத் தவறே அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது என்று காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தோல்வியின் மூலம் ராஜஸ்தான் தொடரிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக மோதவுள்ளன.