சுமார் 78 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்த இரண்டு முதிய நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ள நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் வைரலாகி வருகிறது. கடந்த 1947-ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது, தங்களது சிறுவயதில் பிரிந்த இந்த இரண்டு நண்பர்களும், கிட்டத்தட்ட எட்டு தசாப்தங்களுக்குப் பிறகு தற்போது நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டுள்ளனர்.

வீடியோவின் தொடக்கத்தில், முதுமையின் காரணமாக ஒருவரையொருவர் அடையாளம் காண முயன்று அமைதியாக நிற்கும் அந்த முதியவர்களின் உணர்ச்சிப்பூர்வமான தருணம், பார்ப்பவர் எவரையும் கண்ணீர் சிந்த வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ​இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் தங்களது நெகிழ்ச்சியான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

“உண்மையான அன்புக்கும் நட்புக்கும் எந்த மதமும், எல்லையும் கிடையாது” என்றும், “அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் தவறுகளால் சாதாரண மக்களின் வாழ்க்கையும், நட்பும் தான் சிதைந்து போகிறது” என்றும் பலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் பலர், தங்களது பெற்றோர்களும் அன்றைய பிரிவினையின் போது தங்களது உயிர் நண்பர்களையும், சொந்த ஊரையும் பிரிந்து வாழ்நாள் முழுவதும் கண்ணீரோடு வாழ்ந்த கதைகளை இந்த வீடியோவின் கமெண்ட்டுகளில் உருக்கமாகப் பகிர்ந்து வருகின்றனர்.