मத்தியப் பிரதேச மாநிலம் மைஹார் மாவட்டத்தில் உள்ள ஜரியாரி கிராமத்தில், பழைய நிலத் தகராறு காரணமாக பெண் ஒருவர் பக்கத்து வீட்டுக்காரரால் மாடியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மம்தா படேல் என்ற பெண், கடந்த மே 23-ஆம் தேதி அதிகாலை 6 மணியளவில் தனது வீட்டின் மொட்டை மாடியில் வேலை செய்து கொண்டிருந்தார். இவர்களது வீட்டின் மாடியும், பக்கத்து வீட்டுக்காரரான ரமேஷ் படேல் என்பவரின் மாடியும் இணைந்து இருந்ததால், ரமேஷ் அங்கு வந்து மம்தாவிடம் நிலப் பிரிவினை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

​இந்த வாக்குவாதம் திடீரென வன்முறையாக மாறவே, ஆத்திரமடைந்த ரமேஷ் அங்கிருந்த தடியை எடுத்து மம்தாவை கொடூரமாகத் தாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி, சற்றும் இரக்கமில்லாமல் மம்தாவை 12 முதல் 15 அடி உயரமுள்ள மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். கீழே இருந்த படிக்கட்டுகள் மற்றும் கற்கள் மீது விழுந்த மம்தாவின் இரண்டு முழங்கால்களும் உடைந்து, தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்ததைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள ரமேஷ் படேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.