சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சராக யார் பதவியேற்றாலும் நாட்டின் பிரதமரைச் சந்திப்பது வழக்கமான ஒரு நடைமுறைதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கேரள முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்துள்ளதைப் போலத்தான், தமிழக முதலமைச்சரும் சந்தித்துப் பேசியுள்ளார் என்றும், தமிழக உரிமைகளுக்காகத் தாங்கள் தொடர்ந்து போராடி வருவதால் அவற்றை முதலமைச்சரும் பிரதமரிடம் வலியுறுத்துவார் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
மேலும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராகக் கர்நாடக அரசு செயல்பட்டால் அதைத் தாங்கள் கண்டிப்பாக எதிர்ப்போம் என்றும், தமிழகத்தின் உரிமைகளை எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
அரசியல் கட்சிகளில் நடக்கும் குதிரை பேரத்தை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் நேரங்களில் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றாமல் இருந்துவிட்டு, தேர்தல் முடிந்தவுடன் விலையை உயர்த்துவதைத்தான் மத்திய பாஜக அரசு இப்போது செய்திருக்கிறது என்றும் தனது பேட்டியில் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
