தமிழகப் பல்கலைக்கழகங்களில் வேந்தர்களாக முதலமைச்சரே பொறுப்பேற்பது குறித்துத் தான் கூறிய கருத்துக்கள் சில ஊடகங்களில் தவறாகத் திரிக்கப்பட்டு வெளிவந்துள்ளதாக அமைச்சர் விஸ்வநாதன் தனது அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “முதலமைச்சர் விஜய் உரிய நேரத்தில் இது குறித்துக் கொள்கை முடிவு எடுப்பார்” என்று மட்டுமே தான் கூறியதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தற்போதுள்ள நிலைப்பாடு குறித்துத் தான் வேறு எந்தக் கருத்தையும் கூறாதபோது, அதற்கு மாறாகச் செய்திகளை வெளியிட்டிருப்பதை வன்மையாக மறுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநில உரிமைகளைப் பறிக்கிற வகையில் தனது கருத்து அமைந்ததாகக் கூறுவது முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது என்று அமைச்சர் விஸ்வநாதன் சாடியுள்ளார்.
இல்லாத ஒரு கருத்தைச் சொன்னதாகக் கூறி, அதன் மீது இத்தகைய வாதங்களை முன்வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் என்றும் அவர் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
