‘சம்சார சங்கீதம்’ படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ‘பொற்காலம்’, ‘வெற்றிக் கொடி கட்டு’ உட்பட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை தமிழ்ச்செல்வி.

இவரது கணவர் பிரேம்நாத், சினிமாவில் உதவி இயக்குநராகவும் மேடை நடனக் கலைஞர்கள் சங்கத் தலைவராகவும் உள்ளார். காதலித்து பெரியவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தை கவனிப்பதற்காகத் தமிழ்ச்செல்வி சினிமாவை விட்டு முழுமையாக ஒதுங்கினார். சமீபத்தில் இவருக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பின் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தார்.இந்நிலையில், திடீரென ஏற்பட்ட உடல் சோர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழ்ச்செல்வி, தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு எதிர்பாராதவிதமாகத் மரணமடைந்தார்.

சில தினங்களுக்கு முன் அவர் காலமான நிலையில், நேற்று அவரது படத்திறப்பு விழா மற்றும் நினைவஞ்சலி அன்னதான நிகழ்வை அவரது கணவர் பிரேம்நாத் நடத்தினார்.

அப்போது பேசிய அவர், கேன்சர் நோயுடனான போராட்டத்தைக் கடந்து குணமடைந்த நேரத்தில் மனைவி தன்னைவிட்டுப் பிரிந்ததையும், பிள்ளைகளின் திருமணத்தைப் பார்க்காமல் சென்றதையும் நினைத்து கண்ணீர் மல்க கலங்கினார்.