‘வில் அம்பு’ திரைப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ரமேஷ் சுப்ரமணியம் (49) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவு தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரமேஷ் சுப்ரமணியம், கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ‘வில் அம்பு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஸ்ரீ, ஹரீஷ் கல்யாண் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த இத்திரைப்படத்தை இவருடைய குருவான இயக்குநர் சுசீந்திரனே தயாரித்திருந்தார். ரசிகர்களிடையே இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, நடிகர் விக்ராந்த் மற்றும் யோகி பாபுவை முதன்மைக் கதாபாத்திரங்களாக வைத்து ‘தி கில்லர் மேன்’ என்ற திரைப்படத்தை ரமேஷ் சுப்ரமணியம் இயக்கி, தயாரித்திருந்தார்.
கடந்த சில காலமாகவே கடுமையான எலும்புப் புற்றுநோயால் (Bone Cancer) பாதிக்கப்பட்டு, அதற்கான தீவிர சிகிச்சைப் பெற்று வந்த ரமேஷ் சுப்ரமணியம், சிகிச்சை பலனின்றி இன்று இயற்கை எய்தினார்.

மறைந்த இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியத்தின் இறுதிச் சடங்குகள், நாளை காலை அவரது சொந்த ஊரான கோவை, சுகுனாபுரத்தில் நடைபெறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.