சிறுநீர் கழிக்க முடியாமல் கடந்த 3 ஆண்டுகளாக நரக வேதனையை அனுபவித்து வந்த சீன விவாசயி ஒருவரின் வயிற்றுக்குள் இருந்த விசித்திர மர்மம் வெளிச்சத்துக்கு வந்து மருத்துவர்களையே அதிர வைத்துள்ளது.
தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 56 வயதான சென் என்ற விவசாயி, கடந்த 3 வருடங்களாக அடிக்கடி ஏற்படும் கடுமையான சிறுநீர் வலி காரணமாகத் தூக்கத்தைத் தொலைத்து, எங்கும் பயணிக்கக் கூட முடியாமல் தவித்து வந்துள்ளார். விவசாய வேலையை விட்டுவிட்டு மருத்துவமனைக்குச் செல்ல விரும்பாத அவர், தனக்குத்தானே சுயமாக மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட்டு நோயை வளர்த்துள்ளார்.

சமீபத்தில் வலி தாங்க முடியாமல் குவாங்டாங் மருத்துவப் பல்கலைக்கழக இணை மருத்துவமனைக்குச் சென்ற சென்னுக்கு எக்ஸ்-ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அப்போது அவரது சிறுநீர்ப்பை முழுவதையும் ஆக்கிரமித்து, கிட்டத்தட்ட இரண்டு பெரியவர்களின் கைப்பிடி அளவிலான, 10-க்கு 13 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்ட ஒரு பிரம்மாண்டமான கல் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்!
இந்த அதிர்ச்சித் தகவல் வெளியானதும், மருத்துவ உலகமே திகைத்துப் போனது. அந்தப் பிராந்தியத்திலேயே கண்டறியப்பட்ட மிகப்பெரிய கல் இதுவாகும். இந்தக் கல்லானது, சிறுநீர் தேக்கத்தால் சென்னின் இரண்டு சிறுநீரகங்களையும் வீங்கச் செய்து, ‘இருதரப்பு ஹைட்ரோநெஃப்ரோசிஸ்’ மற்றும் கடுமையான யூரேமியா நோய்த்தொற்றை ஏற்படுத்தும் ஆபத்தான நிலைக்குக் கொண்டு சென்றிருந்தது.

இதையடுத்து, மருத்துவர்கள் குழுவினர் நடத்திய த்ரில்லிங்கான அவசர அறுவை சிகிச்சை மூலம் சென்னின் சிறுநீர்ப்பையிலிருந்து 1.3 கிலோகிராம் எடையுள்ள அந்தப் பாறாங்கல்லை வெற்றிகரமாக அப்புறப்படுத்தினர்.
தற்போது சென் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து நன்றாகக் குணமடைந்து வருகிறார். போதிய அளவு தண்ணீர் குடிக்காதது, சிறுநீரை நீண்ட நேரம் அடக்குவது மற்றும் புரோஸ்டேட் வீக்கம் போன்ற தவறான வாழ்க்கை முறைதான் இவ்வளவு பெரிய கல் உருவாகக் காரணம் என்று எச்சரித்துள்ள நிபுணர்கள், உடலில் லேசான வலி ஏற்பட்டாலும் சுயமாக மருந்து எடுக்காமல் உடனே மருத்துவமனைக்கு ஓடுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
