“என் கண் முன்னாடியே என் மனைவி சாகுறதை என்னால பார்க்க முடியல சார்…” என்று நீதிமன்றத்தில் ஒரு கணவன் கண்ணீர் வடித்த சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் அழ வைத்துள்ளது.
சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் சாதாரண தொழிலாளியாக வேலை பார்த்து வந்த லியாவோ டான் என்பவரின் மனைவி டு ஜின்லிங்கிற்கு, கடந்த 2007-ஆம் ஆண்டு ‘யூரிமியா’ என்ற கொடூர சிறுநீரக நோய் பாதிப்பு ஏற்பட்டது. வாரம் மூன்று முறை டயாலிசிஸ் செய்ய மாதத்திற்கு 70,000 ரூபாய்க்கும் மேல் செலவானதால், லியாவோவின் ஒட்டுமொத்த சேமிப்பும் கரைந்தது.

பெய்ஜிங் குடியிருப்பு அட்டை இல்லாததால் அரசு மருத்துவக் காப்பீடும் மறுக்கப்பட்டு, மனைவியின் மரணம் நெருங்குவதை உணர்ந்த லியாவோ, மருத்துவமனையில் முத்திரையை மட்டுமே நம்பி ரசீது வழங்குவதைக் கவனித்து ஒரு அதிரடி முடிவெடுத்தார். மருத்துவமனையின் போலி முத்திரையைத் தயாரித்து, சுமார் 4 ஆண்டுகள் தடையின்றி போலி ரசீதுகள் மூலம் மனைவியைக் காப்பாற்றி வந்த நிலையில், 2011-ல் மருத்துவமனை கணினி புதுப்பிக்கப்பட்டபோது இந்த 24 லட்ச ரூபாய் விசித்திர மோசடி அம்பலமானது!
இந்த த்ரில்லிங் க்ரைம் பின்னணி ஊடகங்களில் பரவியதும், சீனா முழுவதும் மனிதாபிமான அலை வெடித்தது. ஒரு ஏழைக் கணவனின் பாசப் போராட்டத்தைக் கண்டு உருகிய பொதுமக்கள், சில நாட்களிலேயே 5 லட்சம் யுவான் நன்கொடை வழங்கி லியாவோவின் ஒட்டுமொத்த கடனையும் அடைத்தனர்.

இதையடுத்து, சட்டம் தோற்று மனிதாபிமானம் வெல்லும் வகையில், 2012-ல் நீதிமன்றம் லியாவோவை சிறைக்கு அனுப்பாமல் வீட்டிலேயே இருந்து மனைவியைக் கவனிக்க அதிரடி உத்தரவிட்டது. இறுதியில் 2016-ல் அவரது மனைவி உயிரிழந்த போதிலும், இந்த பாசப் போராட்டத்தால் உந்தப்பட்ட சீன அரசு, லட்சக்கணக்கான ஏழைகள் பயன்பெறும் வகையில் தனது நாட்டின் மருத்துவக் காப்பீட்டு கொள்கையையே அதிரடியாக மாற்றியமைத்தது வரலாற்றுச் சாதனையாக மாறியுள்ளது.
