மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் பணியாற்றும் முன்னனி ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் உள்ளிட்டோர் நாட்டை விட்டு வெளியேற சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையிலான அரசு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அலிபாபா மற்றும் டீப்சீக் போன்ற முன்னணி தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த ஏஐ நிபுணர்கள் இனி வெளிநாடு செல்வதற்கு முன்பாக சீன அரசாங்கத்தின் முன்கூட்டிய அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொதுவாக அரசு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள், பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகளின் கடவுச்சீட்டுகளை (Passport) முடக்கி வைக்கும் சீனா, தற்போது முதல் முறையாகத் தனியார் ஏஐ நிறுவன ஊழியர்களுக்கும் இந்த விதியை நீட்டித்துள்ளது.
நாட்டின் முக்கிய தொழில்நுட்பமும் தனித்துவமான திறமைகளும் வெளிநாடுகளுக்குக் குடிபெயர்ந்து விடக்கூடாது என்ற அச்சமே ஜின்பிங் அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
சீனாவில் தொடங்கப்பட்டு பின்னர் சிங்கப்பூருக்கு மாற்றப்பட்ட ‘மானஸ்’ (Manus) ஏஐ நிறுவனம், மெட்டா நிறுவனத்துடன் மேற்கொண்ட சுமார் 2 பில்லியன் டாலர் ஒப்பந்தம் அங்கு பெரும் புயலைக் கிளப்பியதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் சீனா கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
இந்த விசாரணையின் போது மானஸ் நிறுவனத்தின் இரண்டு இணை நிறுவனர்களும் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. சாட் ஜிபிடி (ChatGPT) அறிமுகத்திற்குப் பிறகு சீனாவில் ஏஐ துறை அசுர வளர்ச்சி அடைந்துள்ள சூழலில், திறமையாளர்களை ஒரு தேசிய சொத்தாகக் கருதி அரசாங்கம் அவர்களின் பதவியை மட்டும் பார்க்காமல் தொழில்நுட்ப முக்கியத்துவத்தை உற்று நோக்குகிறது.
இருப்பினும், அரசாங்கத்தின் இத்தகைய அதீத தலையீடுகள் மற்றும் கடுமையான விதிமுறைகள் காரணமாக, தனியார் நிறுவனங்கள் திறமையான உள்நாட்டு, வெளிநாட்டு வல்லுநர்களைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதில் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என்று உலகளாவிய தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
