“தொடர் தோல்விகளால் ‘எரியுதடி மாலா’ என்று புலம்ப வேண்டாம்; தங்களது அரசியல் சாம்ராஜ்யம் சரிந்து வருவதற்காகத் தவெக மீது பழி போடக் கூடாது” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மிகக் காரசாரமான பதிலடி கொடுத்துள்ளது.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் இபிஎஸ் முன்வைத்த ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து தவெக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை சட்டமுறைப்படி சபாநாயகரிடம்தான் கொடுக்க முடியும் என்றும், இதில் தவெகவை இழுப்பது அரசியல் அறியாமை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கடந்த காலத்தில் கூவத்தூரில் அரங்கேறிய அரசியல் கூத்துகளை நாடே அறியும் என்று நினைவு கூர்ந்துள்ள தவெக தலைமை, நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் அதிமுகவை முற்றிலுமாக நிராகரித்துவிட்ட நிலையில், அந்தத் தோல்வி பாரத்தை மறைப்பதற்காகத் தவெக மீது வீண் பழி சுமத்துவதை இபிஎஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வன்மையாகச் சாடியுள்ளது.
