தமிழகத் தலைநகர் சென்னையில் இன்று அதிகாலை முதலே அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு மதுரையில் ஓடும் ரயிலில் வைத்து சுமார் 180 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் (Drugs) பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த மெகா போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாகவே தற்போது சென்னையில் இந்த அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

​சென்னையின் முக்கிய பகுதிகளான வியாசர்பாடி, கொடுங்கையூர் உள்ளிட்ட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, இந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ‘யேசுதாஸ்’ என்பவரின் வீட்டைக் குறிவைத்து இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த சொத்துக்கள் குறித்த ஆவணங்களைத் திரட்டும் நோக்கில், மத்திய பாதுகாப்புப் படை வீரர்களின் பலத்த பாதுகாப்புடன் இந்த ரெய்டு தீவிரமாக அரங்கேறி வருகிறது.