தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக் கூறி ஆளும் தவெக அரசை விமர்சித்து வரும் நிலையில், திமுக-வின் மூத்த தலைவரும் முன்னாள் எம்பியுமான ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களைச் சந்தித்து தவெக-வை மிகக் கடுமையாக வறுத்தெடுத்துள்ளார். தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறி வரும் பாலியல் தொல்லைகள் மற்றும் குற்றங்களால் மக்கள் கொதித்துப்போய் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தவெக அரசு சோஷியல் மீடியாக்களை வைத்து மக்களைத் திசை திருப்புவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “எப்படி இன்ஸ்டாகிராம் மூலமாகவும், சோசியல் மீடியா மூலமாகவும் தவறான பிரச்சாரங்களைச் செய்து அவர்கள் ஆட்சிக்கு வந்தார்களோ, அதே ‘மோடஸ் ஆபரேண்டி’ (Modus Operandi) பாணியில் இப்போதும் பொய் பிரச்சாரங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தில் நடக்கும் கொடூர சம்பவங்களைத் திசை திருப்புவதற்காகவே இந்த சமூக வலைதளக் கூடாரத்தை அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்” என்று ஆர்.எஸ். பாரதி சாடியுள்ளார்.
தவெக-வின் இன்ஸ்டாகிராம் ஆட்சிக்கு மக்கள் விரைவில் என்ட் கார்டு போடுவார்கள் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ். பாரதியின் இந்த அதிரடிப் பேட்டி தவெக மற்றும் திமுக ஆதரவாளர்களிடையே இணையத்தில் புதிய போர்க்களத்தை உருவாக்கியுள்ளது.
