சமூக ஊடகங்களில் புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் என்ற பைக் வ்லாகர் (Bike Vlogger) தனது கற்பனைத் திறனால் உருவாக்கியுள்ள ஒரு விசித்திரமான பைக் தற்போது இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. பழைய இரும்பு மற்றும் தேவையற்ற பொருட்களைக் கொண்டு, பார்ப்பதற்கு அப்படியே மனித எலும்புக்கூடு போன்ற அமைப்பில் ஒரு பைக்கை அவர் உருவாக்கியுள்ளார்.
ஹாலிவுட் திரைப்படமான ‘கோஸ்ட் ரைடர்’ (Ghost Rider) வாகனத்தை நினைவூட்டும் இந்த பைக்கை ஓட்டிக்கொண்டு அவர் சாலைகளில் செல்லும்போது, பொதுமக்களும் பாதுகாப்புப் பணியாளர்களும் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்க்கின்றனர். முற்றிலும் வித்தியாசமான இந்த ‘எலும்புக்கூடு’ பைக்கின் முன் பகுதியில் மனித மண்டை ஓடு போன்ற அமைப்பும், உடல் பகுதி முழுவதும் எலும்புகளின் வடிவமும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு சாதாரண சைக்கிளின் ஹேண்டில் மற்றும் பிரேக் பயன்படுத்தப்பட்டிருப்பதுடன், சிறிய ரக இன்ஜின் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த மே 12 அன்று இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்து வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் “இது சாட்சாத் எமராஜனின் வாகனம் போல இருக்கிறது”, “டிராஃபிக் போலீஸார் பிடித்தால் எமலோகத்தில் இருந்து வருகிறாயா என்றுதான் கேட்பார்கள்” எனப் பலவாறாகக் கலகலப்பான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
