உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியில், இன்ஸ்டாகிராமில் அறிமுகமான 14 வயது சிறுவனை 40 வயது பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறி காவல் நிலையம் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய 4 குழந்தைகளின் தாயான அந்தப் பெண்ணிற்கு, இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியதாகவும், இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் அந்தப் பெண் உரிமை கொண்டாடுகிறார். ஆனால், இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.
அந்தப் பெண் காதலிப்பதாகக் கூறும் அந்த 14 வயது சிறுவன், தற்பொழுது தனது தந்தையுடன் சென்னையில் வசித்து வருகிறான். மேலும், அந்தச் சிறுவன் இப்பெண்ணின் மூத்த மகனை விட 5 வயது இளையவன் என்பது குறிப்பிடத்தக்கது. சில நாட்களாக அச்சிறுவன் அந்தப் பெண்ணுடன் பேசுவதைத் தவிர்த்து, சேர்ந்து வாழ மறுத்ததால் ஆத்திரமடைந்த பெண், காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். இதைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து காவல் நிலைய அதிகாரி வசந்த் சிங் கூறுகையில், “அப்பெண் தன் மீது எந்தவித சட்டப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும், அச்சிறுவன் தன்னுடன் வர வேண்டும் என்றும் கூறினார். பின்னர் இருதரப்பு குடும்பத்தினரையும் அழைத்து, போலீஸார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, அறிவுரை கூறி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என்றார். இச்சம்பவம் தற்பொழுது சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
