பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கே.எஸ்.சி.ஏ (KSCA) பிரிவு லீக் கிரிக்கெட் போட்டியின் போது, கர்நாடக அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எஸ்.எல்.அக்ஷய் (39) திடீர் மாரடைப்பால் காலமானார். கடந்த 2014-15 ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பை வென்ற கர்நாடக அணியில் இடம்பெற்றிருந்த இவர், நேற்று 4 ஓவர்கள் பந்துவீசி முடித்த பின் திடீரென அசெளகரியமாக இருப்பதாகக் கூறி மைதானத்தை விட்டு வெளியேறினார்.
ஆனால், அடுத்த சில மணிநேரங்களிலேயே அவர் மாரடைப்பால் மரணமடைந்தது ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நல்ல உடற்தகுதியுடன், ஒழுக்கமான கட்டுப்பாடுகளுடன் இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஏன் இப்படி திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது என்ற மிகப்பெரிய மருத்துவக் கேள்வியை இந்தச் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு ஸ்பார்ஷ் மருத்துவமனையின் தலைமை இதய நிபுணர் டாக்டர் ரஞ்சன் ஷெட்டி கூறுகையில், “வெளியே தெரியும் உடற்தகுதி மட்டுமே இதய ஆரோக்கியத்திற்கான சான்றிதழ் அல்ல” என்று எச்சரிக்கிறார். இந்தியர்களிடையே இருக்கும் மரபணு குறைபாடுகள், ரத்தக் குழாய்களில் மறைந்திருக்கும் கொழுப்புப் படிவங்கள் (Plaque) போன்றவை கடுமையான உடற்பயிற்சியின் போது ஏற்படும் ரத்த அழுத்த அதிகரிப்பால் வெடித்து, ரத்த உறைவை ஏற்படுத்தி திடீர் மாரடைப்பை உருவாக்குகிறது.
மேலும், நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பது, போதிய தூக்கமின்மை மற்றும் உடலில் ஏற்படும் வறட்சி (Dehydration) ஆகியவை ரத்தத்தை கெட்டியாக்கி இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைத் தடை செய்கின்றன. எனவே, வெறும் உடல் தகுதித் தேர்வுகளோடு நிறுத்தாமல், 12-lead ECG, எக்கோ (Echocardiogram), கார்டியாக் MRI மற்றும் ட்ரெட்மில் (Stress Test) போன்ற பிரத்யேக இதயப் பரிசோதனைகளைச் செய்துகொள்வது மட்டுமே இதுபோன்ற திடீர் மரணங்களைத் தடுக்கும் ஒரே வழி என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
