தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பப்படி, மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணியின் சார்பில் தேமுதிக 10 தொகுதிகளில் போட்டியிட்டு, விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தல் முடிவுகள் மக்களின் உண்மையான மனநிலையின் வெளிப்பாடு அல்ல என்றும், இது வெறும் கவர்ச்சிக்கும் மாயைக்கும் கிடைத்த தற்காலிக வெற்றிதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்தத் தோல்வியைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும், கேப்டன் விஜயகாந்த் வகுத்துக் கொடுத்த பாதையில் தொடர்ந்து உறுதியுடன் பயணிப்போம் என்றும் அவர் தொண்டர்களுக்குத் தைரியம் கூறியுள்ளார்.
மேலும், தங்கள் கூட்டணிக்கு வாக்களித்து ஆதரவு தந்த மக்களுக்கும், தோழமைக் கட்சியினருக்கும் பிரேமலதா தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பெற்றுள்ள வெற்றியை கேப்டனுக்கும், அந்தத் தொகுதி மக்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் சமர்ப்பிப்பதாகக் கூறியுள்ள அவர், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் இறுதியில் தர்மமே வெல்லும் என்று தனது அறிக்கையில் நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்.
