உலகில் தேடப்பட்டு வரும் முன்னணி பயங்கரவாதிகள் பலர், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வெளிப்படையாக ஒன்று கூடியிருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், தாங்கள் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடு அல்ல என்று பாகிஸ்தான் அரசு கூறிவந்த பொய் மீண்டும் சர்வதேச அரங்கில் அம்பலமாகியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) அண்மையில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ‘அல்-பத்ர்’ பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி ஹம்ஸா புர்ஹான் (எ) அர்ஜுமந்த் குல்சார் தாரின் இறுதிச்சடங்கு இஸ்லாமாபாத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதிநவீன ஆயுதங்கள் ஏந்திய பயங்கரவாதிகளின் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த இறுதிச்சடங்கில், அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ‘ஹிஸ்புல் முஜாஹிதீன்’ தலைவர் சையத் சலாஹுதீன் மற்றும் ‘அல்-பத்ர்’ அமைப்பின் தலைவர் பகத் ஜமீன் கான் உள்ளிட்ட பல முக்கிய பயங்கரவாதிகள் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பாகிஸ்தானிலும், அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும் சமீபகாலமாக தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகள் அடையாளம் தெரியாத நபர்களால் மர்மமான முறையில் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனால் பயங்கரவாத அமைப்புகளிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே, இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ‘அல்-பத்ர்’ தலைவர் பகத் ஜமீன் கானுக்கு ஏகே-47 ரக துப்பாக்கிகள் ஏந்திய பயங்கரவாதிகள் பல அடுக்கு பாதுகாப்பு அரண் அமைத்திருந்தனர். பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு மற்றும் அந்நாட்டு ராணுவம் அளித்து வரும் பகிரங்க ஆதரவையே இந்த நிகழ்வு காட்டுவதாக சர்வதேச பாதுகாப்பு முகமைகள் சுட்டிக்காட்டுகின்றன.
சமீபத்தில் கூட, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் நெருங்கிய உதவியாளர் ஒருவர், மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி ஹஃபீஸ் சயீதின் மகன் ஹஃபீஸ் தல்ஹா சயீதுடன் ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த ஹம்ஸா புர்ஹான் (எ) அர்ஜுமந்த் குல்சார் தார், முறையான ஆவணங்களுடன் பாகிஸ்தானுக்குப் பயணம் செய்து அங்கு ‘அல்-பத்ர்’ பயங்கரவாத அமைப்பில் இணைந்தான். கடந்த 2019-ஆம் ஆண்டு 40 சிஆர்பிஎஃப் (CRPF) வீரர்கள் வீரமரணம் அடையக் காரணமான புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் இவனுக்குத் தொடர்பிருப்பது முதன்முதலில் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அரசால் இவன் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டான். காஷ்மீர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதப் பாதையில் திருப்புவது, புதிய ஆட்களைச் சேர்ப்பது மற்றும் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி திரட்டுவது போன்றவற்றில் இவன் முக்கியப் புள்ளியாகச் செயல்பட்டு வந்தான்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாஃபராபாத் பகுதியில் தனது அடையாளத்தை மறைத்து, ஒரு தனியார் கல்லூரியின் முதல்வராக புர்ஹான் பதுங்கியிருந்தான். வியாழக்கிழமை காலை கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வந்தபோது, அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத நபர்கள் இவனது தலையில் மிக அருகாமையில் இருந்து சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த புர்ஹான் மருத்துவமனையில் உயிரிழந்தான். இத்தாக்குதல் தொடர்பாக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
