உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தியும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும் 70-க்கும் மேற்பட்ட மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் தங்களது அரசு சொகுசு கார்களை ஓரங்கட்டிவிட்டு, சைக்கிளில் நீதிமன்றப் பணிக்கு வருகை தந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் வாகனப் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்குத் தீர்வாகத் தங்களது பங்களிப்பை வழங்க லக்னோ நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி முடிவு ஒன்றை எடுத்தனர். அதன்படி, சனிக்கிழமை அன்று காலை லக்னோ மாவட்ட நீதிமன்றத்தைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் தங்களது ஆடம்பர கார்களை வீடுகளிலேயே நிறுத்திவிட்டு, கோட்-சூட் அணிந்தபடி வரிசையாகச் சைக்கிள்களை ஓட்டிக்கொண்டு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர்.
நீதிமன்றப் பாதைகள் மற்றும் வளாகத்தில் நீதிபதிகளின் சைக்கிள்கள் அணிவகுத்து நின்ற இந்த அசத்தலான காட்சி, அங்கு வந்த பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுடன், சமூக வலைத்தளங்களிலும் இந்த வீடியோ வைரலாகி நெட்டிசன்களின் பாராட்டுகளை அள்ளி வருகிறது.
