நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 10ஆம் தேதி தமிழக முதல்வராகப் பதவியேற்றார்.

கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்ததோடு மட்டுமல்லாமல், தனது அமைச்சரவையில் இதுவரை இல்லாத அளவாக 8 பட்டியலின அமைச்சர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திமுகவை அரசியல் தளத்தில் விஜய் தனிமைப்படுத்தியுள்ளார்.

இதனால் அதிருப்தியடைந்த திமுக எம்பி ஆ.ராசா, விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளை விமர்சிக்கும் வகையில், “தன் வீட்டுத் தென்னை எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் அதற்கு என்ன பெயர்?” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ பட இயக்குநர் லெனின் பாரதி, அதிகாரம் இழந்த வெறியில் திமுக தனது அருவருப்பான அதிகார வெறித் தனத்தை தானே தோலுரித்துக் காட்டிக் கொள்வதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

அதேநேரம், ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு அதிக இடமளித்துள்ள விஜய்யின் இந்த புதிய அமைச்சரவையை இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோர் மனதாரப் பாராட்டியுள்ளனர்.