சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது, அதிகாரிகள் தொலைபேசியை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேரில் சென்று முறையிட்டபோது, “10 நிமிடங்களில் மின்சாரம் வந்துவிடும்” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், நள்ளிரவு 2 மணி வரை மின்சாரம் வரவில்லை என்றும், அதன் பிறகு அதிகாலை 3 மணி வரை லோ-வோல்டேஜ் (குறைந்த மின்னழுத்தம்) மற்றும் ஹை-வோல்டேஜ் (அதிகப்படியான மின்னழுத்தம்) மாறி மாறி வந்ததால் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதேபோல் ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு நேரங்களில் சுமார் 4 மணி நேரம் வரை மின்தடை நீடித்தது. கோடைக்காலம் என்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், தொடர் மின்தடையால் இரவு முழுவதும் தூக்கத்தைத் தொலைத்து அவதிப்பட்டு வருவதாகக் கூறும் பொதுமக்கள், தடையில்லா சீரான மின் விநியோகம் வழங்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்த மின்தடைப் பிரச்சினை மற்றும் மின்வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, “தமிழ்நாடு மின்வாரியம் தற்போது ரூ.2.5 லட்சம் கோடி கடனில் உள்ளது. கடந்த காலங்களில் பல டெண்டர் முறைகேடுகள் நடந்துள்ளன. தற்போது நிர்வாகத்தை முழுமையாக சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். முந்தைய ஆட்சியில் மின் துறையை நிர்வகித்தவர்கள் செய்த பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்வாரியத்தில் ஒரு லட்சம் பணியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில், தற்போது 52,000 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். சென்னையில் தற்போது மின் கட்டமைப்பு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாலேயே ஆங்காங்கே மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின் வயர்கள் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
பொதுமக்களின் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மின்தடை குறித்து புகார் அளித்தால் உடனடியாக சரிசெய்யப்படும். பணியில் ஏதேனும் தவறுகள் நேர்ந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை பாயும். தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் தற்போதைக்கு அரசிடம் இல்லை. மேலும், திருப்பரங்குன்றம் கோவிலுக்கு நான் சென்றபோது எவ்வித விதிகளையும் பின்பற்றுமாறு எனக்கு அறிவுறுத்தப்படவில்லை என்றார்.
