நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நோக்கி, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா விடுத்துள்ள கொலை மிரட்டல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “ஆயுதம் இருந்திருந்தால் சுட்டிருப்பேன்” என்று அவர் பகிரங்கமாகக் கூறியது ஜனநாயக மரபுகளுக்கு முற்றிலும் எதிரானது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

மேலும் தமிழர் ஒற்றுமையைக் குலைக்கத் துடிக்கும் இத்தகைய துரோக அரசியலைத் தமிழினம் ஒருபோதும் அனுமதிக்காது என்று அவர் எச்சரித்துள்ளார். அண்டை நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வளவு தரக்குறைவாகப் பேசுவதைச் சம்பந்தப்பட்ட அரசுகள் வேடிக்கை பார்ப்பது வருத்தத்திற்குரியது என்று ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, ராமநாதன் அர்ச்சுனா தனது ஜனநாயக விரோதப் பேச்சை உடனடியாகத் திரும்பப் பெறுவதோடு, சீமானிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஒற்றுமையின்மையே கடந்த கால பின்னடைவுகளுக்குக் காரணம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.