சத்தீஸ்கர் மாநிலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவில் நக்சலிசம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சத்தீஸ்கரில் பாஜக அரசு பொறுப்பேற்ற டிசம்பர் 13, 2023 அன்றே இதற்கான உறுதியான இயக்கம் தொடங்கியதாகக் குறிப்பிட்ட அவர், மார்ச் 31, 2026-க்குள் நக்சலிசத்தை ஒழிப்பதற்காக ஆகஸ்ட் 2024-ல் அனைத்து மாநில டிஜிபி-க்களின் கூட்டம் கூட்டப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை நினைவு கூர்ந்தார்.

பாதுகாப்புப் படையினரின் அசாத்திய வீரம், தைரியம் மற்றும் தியாகத்தின் காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட அந்த காலக்கெடுவுக்கு முன்பாகவே நாட்டில் இருந்து நக்சலிசம் தற்பொழுது வேரோடு ஒழிக்கப்பட்டுள்ளது என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். நக்சல் ஒழிப்பு நடவடிக்கைக்குப் பாஜக அல்லாத பிற மாநில அரசுகளும் மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நிலையில், சத்தீஸ்கரில் ஆட்சியில் இருந்த முந்தைய காங்கிரஸ் அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

சத்தீஸ்கரில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் பஸ்தர் பகுதியில் நக்சலிசத்தை ஒழிக்க முடிந்ததாகக் கூறிய அவர், “வளர்ச்சி இல்லாததால் நக்சலிசம் வளரவில்லை, மாறாக நக்சலிசம் இருந்ததால்தான் பஸ்தர் போன்ற பகுதிகளுக்கு வளர்ச்சி சென்றடையவில்லை” என்று அறிவு ஜீவிகளின் கருத்துகளுக்குப் மறுப்பு தெரிவித்துள்ளார்.

வன்முறை மற்றும் அச்சத்தின் காரணமாகஇத்தனை காலம் முடங்கிக் கிடந்த பகுதிகளில், இனி புதிய தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய ஒரு விரிவான வளர்ச்சி ஏற்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.