பிரதமர் நரேந்திர மோடியின் ஐரோப்பியப் பயணத்தின்போது, செய்தியாளர் சந்திப்பில் அவரிடம் கேள்விகளை எழுப்பி சர்வதேச அளவில் விவாதப் பொருளான நார்வே பத்திரிகையாளர் ஹெல் லாங்கேயின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை ‘மெட்டா’ நிறுவனம் அதிரடியாக முடக்கியுள்ளது.
நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் இந்திய மற்றும் நார்வே பிரதமர்கள் இணைந்து நடத்திய கூட்டு ஊடக சந்திப்பின்போது இந்த சர்ச்சை வெடித்தது. செய்தியாளர் சந்திப்பு முடிந்து பிரதமர் மோடி அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தபோது, பின்னாலிருந்து கத்திய நார்வேயின் ‘டாக்ஸாவிசென்’ பத்திரிகையாளர் ஹெல் லாங்கே, “உலகின் மிகவும் சுதந்திரமான பத்திரிகைகளின் சில கேள்விகளுக்கு ஏன் பதிலளிக்கக் கூடாது?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 157-வது இடத்தில் இருப்பதைக் குறிப்பிட்டு தனது கேள்விக்கு அவர் நியாயம் கற்பிக்க முயன்றார். இதற்கு அங்கிருந்த இந்திய வெளியுறவு அமைச்சகச் செயலாளர் சிபி ஜார்ஜ், “இந்தியாவைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்கள் இது போன்ற கேள்விகளை எழுப்பக் கூடாது” என்று மேடையிலேயே கடுமையான பதிலடி கொடுத்தார். இவர்களுக்கிடையேயான வாக்குவாதம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவியது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்திய இணையப் பயனர்களிடமிருந்து ஹெல் லாங்கே கடுமையான இணையவழித் துன்புறுத்தல்களையும், ட்ரோல்களையும் எதிர்கொண்டார். இந்நிலையில், மெட்டா நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகள் இரண்டையும் முடக்கியுள்ளதாக ஹெல் லாங்கே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
Throughout all day I have struggled to log onto my Instagram account. Now I have been suspended. It is a small prize to pay for press freedom, but I’ve never experienced it before. pic.twitter.com/XCitS65Rlg
— Helle Lyng (@HelleLyngSvends) May 19, 2026
பத்திரிக்கை சுதந்திரத்திற்காக நான் கொடுத்த சிறிய விலைதான் இது. ஆனால், நான் இதற்கு முன்பு இப்படி ஒரு கசப்பான அனுபவத்தை எதிர்கொண்டதில்லை. என்னால் முடிந்தவரை பல இந்தியர்களுக்குப் பதிலளிக்க விரும்பினேன், ஆனால் இப்போது எனது கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது எனது பதிலளிக்கும் நேரத்தைத் தாமதப்படுத்தும். மெட்டா நிறுவனம் எனது கணக்குகளை விரைவில் மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஹெல் லாங்கேவுக்கு எதிராகத் திரும்பிய இணையவாசிகள், சீன அதிபர் ஷி ஜின்பிங் குறித்து அவர் முன்பு எழுதிய பழைய கட்டுரைகளையும் அறிக்கைகளையும் தோண்டித் துருவி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்தியாவில் மனித உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பிய லாங்கேவை, பல பயனர்கள் “வெளிநாட்டு உளவாளி”, “சீனப் பினாமி” என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஒருபுறம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டாலும், மறுபுறம் எக்ஸ் தளத்தில் இவரது பிரபலம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தச் சர்ச்சை வெடிப்பதற்கு முன்பு வரை எக்ஸ் தளத்தில் வெறும் 800-க்கும் குறைவான பின்தொடர்பவர்களை (Followers) மட்டுமே கொண்டிருந்த ஹெல் லாங்கேவை, பிரதமர் மோடி குறித்த சர்ச்சை வைரலான சில நாட்களுக்குள் 45,000-க்கும் மேற்பட்டோர் பின்தொடரத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
