விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த கோணம்பட்டி பகுதியைச் சேர்ந்த கிராமத்துப் பெண் ஒருவர் தங்களின் அன்றாடப் போக்குவரத்து அவதி குறித்துத் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு விடுத்துள்ள ஆதங்கக் கோரிக்கை வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தாங்கள் கோணம்பட்டி பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சுமார் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் கடந்தும், இதுவரை ஒரு பேருந்து கூட வரவில்லை என்று அந்தப் பெண் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
“யாராவது மருத்துவமனை போன்ற அவசரத் தேவைக்காகப் பேருந்துக்காகக் காத்திருந்தால் அவர்களின் நிலை என்ன ஆகும்? ஏற்கனவே எங்கள் ஊருக்குள்ளிருந்து 2 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்துதான் இந்த பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கிறோம்” என்று தங்களின் தினசரி அவஸ்தையை உடைத்துள்ளார். மேலும் அரசிடம் அதிரடி கோரிக்கை வைத்துள்ள அந்தப் பெண் “எங்களுக்கு இலவசப் பேருந்துகள் (Free Bus) எதுவும் வேண்டாம்; அதற்குப் பதிலாக எங்கள் ஊருக்கு 30 நிமிடத்திற்கு ஒருமுறை அல்லது 45 நிமிடத்திற்கு ஒருமுறை முறையான பேருந்து வசதி வரும்படி அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று தங்களின் ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
"எங்களுக்கு Free Bus வேண்டாம் சார்.." முதல்வருக்கு கோரிக்கை வைத்த பெண் #bus #freebus #cmvijay #govt #thanthitv pic.twitter.com/hWgIyGqCC7
— Thanthi TV (@ThanthiTV) May 20, 2026
தனியார் பேருந்துகள் இந்த நிறுத்தத்தில் நிற்பதே இல்லை என்றும், அரசுப் பேருந்துகள் அதிகமாக வருவதே இல்லை என்றும் அவர்கள் தங்களின் கடுமையான ஆதங்கத்தைக் காணொளியாகப் பதிவு செய்துள்ளார். இந்த நியாயமான ஆக்ரோஷ வீடியோ தற்போது எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிக வேகமாகப் பரவி, வைரலாகி வருகிறது.
