தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் குறித்தும், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்தும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வழக்கமான பாணியில் கடுமையாக வறுத்தெடுத்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “நாடு ஏற்கனவே 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்கித் தவிக்கிறது என்ற அடிப்படை எதார்த்தம் தெரியாமல் தான் நீங்கள் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றீர்களா?” என்று புதிய முதலமைச்சரை நோக்கி அதிரடிக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

​மேலும் நாட்டின் பட்ஜெட் ரகசியங்களைத் தோலுரித்த சீமான், “நம்முடைய மொத்த பட்ஜெட்டே வெறும் 3 லட்சம் கோடிதான். அதில் வாங்கிய கடனுக்கான வட்டிக்கே 1 லட்சம் கோடி ரூபாய் போய்விடுகிறது. மீதமுள்ள தொகையை வைத்துக்கொண்டு இவர்கள் அறிவித்த இலவசங்கள், சிலிண்டர் மானியம், கல்விக்கடன் தள்ளுபடி போன்ற அத்தனை அறிவிப்புகளையும் செயல்படுத்த வேண்டும் என்றால் இன்னும் 10 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டும்.

கொடுக்கவே முடியாது என்று நன்றாகத் தெரிந்தே, தேர்தலுக்காக இப்படி வெற்று வாக்குறுதிகளைக் அள்ளி வீசுவது மக்களுக்குச் செய்யும் துரோகம். நாங்கள் பொய் சொல்ல விரும்பாமல், மக்களுக்கு உண்மையைச் சொல்லித் தோற்றதையே பெருமையாகவும் மேன்மையாகவும் கருதுகிறோம்” என்று ஆளும்கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.