மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில், மாமனார் ஒருவர் தனது மருமகனுக்கு வழங்கிய விசித்திரமான மற்றும் ஆடம்பரமான பரிசு சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சாங்லி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த மாமனார், தனது மருமகனை வரவேற்கும் விதமாக ஒன்றரை கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட பாரம்பரிய ‘கோலாப்பூரி செருப்பை’ பரிசாக வழங்கியுள்ளார்.
மேலும் பார்ப்பதற்கு மிகவும் நேர்த்தியாகவும், பாரம்பரிய வடிவத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஜோடி வெள்ளிக் காலணியின் மதிப்பு சுமார் 4 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தனித்துவமான வெள்ளிக் காலணியை உருவாக்குவதற்காக, கோலாப்பூரைச் சேர்ந்த ஒரு கைவினைஞர் சுமார் எட்டு நாட்கள் கடினமாக உழைத்து இதனை வடிவமைத்துள்ளார்.
இதற்குச் செய்கூலியாக மட்டும் அந்த கைவினைஞருக்கு 22 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த காலகட்டத்திலும், உறவுகளின் மீதான பாசத்தையும் தங்களது கௌரவத்தையும் வெளிப்படுத்துவதற்காக வழங்கப்பட்ட இந்த அரிய பரிசு, தற்போது திருமண சீசனில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
