வேலூர் மாவட்டம் பொன்னை கணேஷ் நகர் பகுதியில் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக, அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கள்ளச்சந்தை மது விற்பனை கும்பல், அந்தப் பெண்ணை கொடூரமான முறையில் தாக்கியுள்ளது. நடுரோட்டில் அரங்கேறிய இந்த கொடூரத் தாக்குதல் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் கள்ளச்சந்தை மது விற்பனை தொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் அளித்தும், கடந்த இரண்டு நாட்களாக காவல்துறை தரப்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காவல்துறையின் இந்த அலட்சியப் போக்கே, அந்த கும்பல் பெண்ணைத் தாக்கக் துணிந்ததற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் வேலூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
