தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், தனது உடலைக் கட்டுக்கோப்பாக (ஃபிட்) வைத்திருக்கும் ரகசியம் மற்றும் அவரது தினசரி உணவுப் பட்டியல் குறித்த விபரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்தது முதல், மக்களின் கோரிக்கைகளுக்கும் ‘அண்ணா’ என்ற குரலுக்கும் உடனடியாகச் செவிசாய்த்து, அடுத்தடுத்த அதிரடிச் செயல்களால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார் விஜய். இந்த நிலையில், 50 வயதிலும் அவரது இளமை மற்றும் சுறுசுறுப்பின் பின்னணியில் இருக்கும் டயட் ரகசியங்கள் திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் கவனத்தைப் பெற்றுள்ளன.
முதலமைச்சர் விஜய் எந்தவொரு கடுமையான உணவு முறையையும் (Strict Diet) பின்பற்றுவதில்லை என்று கூறப்படுகிறது. முக்கியமாக, வெளியில் சமைக்கப்படும் உணவுகள் மற்றும் ‘ஜங்க் ஃபுட்’ வகைகளை அவர் முற்றிலுமாகத் தவிர்த்து விடுகிறார். வீட்டில் சமைக்கப்படும் எளிய உணவுகளையே அவர் அதிகம் விரும்பிச் சாப்பிடுகிறார். உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலை (Energy) அளிக்கும் வகையில் இட்லி, முட்டை மற்றும் சில பழ வகைகளை காலை உணவாக எடுத்துக் கொள்கிறார்.
மதிய நேரத்தில் அளவான அரிசி சாதம், காய்கறிகளுடன், புரதச்சத்து (Protein) நிறைந்த சிக்கன் மற்றும் மீன் போன்ற உணவுகளை முதன்மையாகச் சேர்த்துக் கொள்கிறார். காலை மற்றும் மதிய உணவுகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் பசி ஏற்பட்டால், சாலட், புதிய பழச்சாறுகள் அல்லது இளநீர் போன்ற ஆரோக்கியமான இயற்கை பானங்களை அருந்துகிறார்.
இரவு நேரத்தில் உடலுக்குப் பாரமில்லாத, எளிதில் ஜீரணமாகக்கூடிய சூப், சாலட் போன்ற எளிய உணவுகளை மட்டுமே சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். எந்த உணவாக இருந்தாலும், அதை அளவுக்கு அதிகமாக உண்ணாமல் மிதமான அளவில் மட்டுமே உட்கொள்வதே முதலமைச்சர் விஜய்யின் ஆரோக்கியத்திற்கும் சுறுசுறுப்பிற்கும் மிக முக்கியமான ரகசியம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
