மின்னணு ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பரப்பப்படும் எதிர்மறையான கருத்துக்களை நம்பாமல், இந்தியாவின் உண்மையான கலாச்சாரத்தை நேரில் அறிய விரும்பிய சிங்கப்பூர் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரின் பயண அனுபவ வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
சிங்கப்பூரில் வளர்ந்த அந்தப் பெண், இந்தியாவின் உண்மையான முகத்தைத் தன் கண்களால் காண வேண்டும் என்ற ஆவலில் வட இந்தியாவிற்குச் சுற்றுலா வந்துள்ளார். தனது பயணத்தின் போது உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால், ஜெய்ப்பூரின் ஹவா மஹால் மற்றும் டெல்லி செங்கோட்டை உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு அவர் சென்றுள்ளார். இந்த அனுபவங்களை அவர் சுருக்கமான ‘விலாக்’ (Vlog) வடிவில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவிற்குள் நுழைந்த தனது ஆரம்பக்கட்ட அனுபவங்களை மிகவும் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ள அவர், “இங்குள்ள போக்குவரத்து நெரிசலும், காற்றில் பறக்கும் தூசியும் ஆரம்பத்தில் எனக்கு ஒருவித அதிர்ச்சியை (Sensory Overload) தந்தன. தெருக்களில் ஆங்காங்கே குப்பைகள் சிதறிக் கிடப்பதையும், ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் என்னை உற்று நோக்குவதையும் பார்க்க முடிந்தது. நீங்கள் ஒரு அமைதியான, ரிலாக்ஸான பயணத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், வட இந்தியா அதற்கான இடம் அல்ல” என்று உண்மையை உடைத்துப் பேசியுள்ளார்.
அதே வேளையில், இந்தியாவின் நெரிசலான சூழலையும் தாண்டி, இங்குள்ள கலை மற்றும் கலாச்சாரம் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். “இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் வரலாறு, கலாச்சாரம் மற்றும் கதைகள் நிறைந்துள்ளன. இவ்வளவு துடிப்பான, வண்ணமயமான நகரங்களை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. நான் சந்தித்த மிக அழகான இடங்களில் இந்தியாவும் ஒன்று” என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
வெளிநாட்டுப் பெண்கள் இந்தியாவில் தனியாகப் பயணிப்பது குறித்து இணையத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் பேசியுள்ளார். “ஆரம்பத்தில் சூழல் சற்று மிரட்சியாக இருந்தாலும், எனது பயணத்தின் போது எனது பாதுகாப்பிலும் நலனிலும் உண்மையிலேயே அக்கறை கொண்ட பல மனிதர்களை நான் சந்தித்தேன். நான் இதற்கு முன்பு சென்ற பல வளர்ந்த நாடுகளை விட, இந்தியாவில் தான் அதிக பாதுகாப்பாக உணர்ந்தேன்” என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இணையதளங்களில் இந்தியாவைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்படும் எதிர்மறைப் பிம்பங்களை உடைக்கும் விதமாக அமைந்துள்ள இந்த சிங்கப்பூர் பெண்ணின் பதிவு, தற்போது நெட்டிசன்களிடையே பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.
View this post on Instagram
