ரோம் நகரில் நடந்த இத்தாலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில், முன்னணி வீரர்களான ஜானிக் சினருக்கும் டேனில் மெத்வதேவுக்கும் இடையே நடந்த மோதல் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பரபரப்பான ஆட்டத்தின் இறுதி செட்டில், உலகின் நம்பர் 1 வீரரான சினருக்கு காலில் தசைப்பிடிப்பு (Cramps) ஏற்பட்டதால், அவர் திடீரென மெடிக்கல் டைம்-அவுட் எடுத்து சிகிச்சை பெற்றார். ஏடிபி (ATP) விதிகளின்படி தசைப்பிடிப்புக்கு மெடிக்கல் டைம்-அவுட் வழங்கக் கூடாது என்பதால், சினருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை எதிர்த்து ரஷ்ய வீரர் மெத்வதேவ் களத்திலேயே தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

​”தசைப்பிடிப்புக்காக பிசியோதெரபிஸ்ட்டை அழைத்தால் நமக்கு அபராதம் விதிக்க மாட்டார்களா?” என்று மெத்வதேவ் ஆடுகளத்திலேயே நடுவர்களிடம் ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பினார். மழைக்கு மத்தியிலும், பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சினரின் இந்தச் செயல் விதிகளுக்கு எதிரானது என்று ரசிகர்கள் மற்றும் டென்னிஸ் விமர்சகர்கள் மத்தியில் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.