நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சிபிஐ நடத்தி வரும் விசாரணையில், ஜெய்ப்பூரைச் சேர்ந்த ரிஷி என்ற மாணவர் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இயற்பியலில் 9, வேதியியலில் 15 மற்றும் உயிரியலில் வெறும் 20 மதிப்பெண்கள் என கோட்பாட்டுத் தேர்வுகளில் மிகக் குறைந்த மதிப்பெண்களைப் பெற்று, கருணை மதிப்பெண்களுடன் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவருக்காக, அவரது தந்தை பெரும் தொகையைக் கொடுத்து வினாத்தாளை வாங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது.
இந்த வினாத்தாள் கசிவு மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால், தகுதியே இல்லாத இதுபோன்ற மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து, எதிர்காலத்தில் மக்களின் உயிரோடு விளையாடும் மருத்துவர்களாக உருவாகியிருப்பார்கள் என்ற பேரதிர்ச்சி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.
தனது மகன் மற்றும் மருமகனுக்காகப் பெறப்பட்ட இந்த வினாத்தாளை, பேராசை காரணமாகப் பயிற்சி மைய மாணவர்களுக்கும் விநியோகித்தபோதுதான் இந்த மெகா ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சுமார் 15 மணி நேரத்திற்கு முன்பே வினாத்தாள் கசியவிடப்பட்டதால், தற்போது மே 3-ஆம் தேதி நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21-ஆம் தேதி நாடு முழுவதும் மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. தகுதியுள்ள 22 லட்சம் மாணவர்களின் உழைப்பைச் சிதைக்கும் வகையில் நடந்த இந்த வினாத்தாள் விற்பனை விவகாரம், தற்போது இந்தியாவையே உலுக்கி வருகிறது.
