ஜெர்மனி நாட்டின் பிராண்டன்பர்க் பகுதியில், குழந்தைகளைக் காக்க வேண்டிய ஒரு மருத்துவரே, 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிராண்டன்பர்க்கில் உள்ள ஒரு முக்கிய மருத்துவமனையில் பணியாற்றி வந்த 46 வயதான குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை சுமார் 12 ஆண்டுகளாகத் தனது கொடூரச் செயலைத் தொடர்ந்துள்ளார். சிகிச்சைக்காக வரும் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமியரை அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது தற்போது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அவர் மீது சுமார் 130-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு சிறுமியின் தாய்க்கு, மருத்துவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாகப் போலீசில் புகார் அளிக்க, அதிரடியாகக் களமிறங்கிய போலீசார் அந்த மருத்துவரைத் தனிப்படையினர் கைது செய்தனர். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அவர் செய்த குற்றங்களை உறுதிப்படுத்தும் வகையில் பல டிஜிட்டல் சேமிப்பு சாதனங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் சிக்கின.

புதன்கிழமை அன்று பெர்லின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த மருத்துவர் மீது விசாரணை தொடங்கப்பட்டது. பணியில் இருக்கும்போதே, அப்பாவி குழந்தைகளைத் தனிமையில் அழைத்து அவர் இந்த அத்துமீறல்களில் ஈடுபட்டது அதிகாரிகளை அதிரச் செய்துள்ளது. ஏற்கனவே பிரான்ஸ் நாட்டில் 298 நோயாளிகளைத் துன்புறுத்திய அறுவை சிகிச்சை நிபுணர் ஜோயல் லெ ஸ்கோர்னெக்கிற்கு, கடந்த மே 2025-இல் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜெர்மனியிலும் இதேபோன்ற ஒரு கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதால், மருத்துவமனைகளில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து உலகளவில் கேள்வி எழுந்துள்ளது.