மலேசியாவில் தனது பணி நேரம் முடிந்த பிறகும், ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்காக உடனடியாகச் செயல்பட்ட செவிலியர் ஒருவரின் வீடியோவும் செய்தியும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மலேசியாவில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவர், தனது ஷிப்ட் முடிந்த பிறகு அங்கிருந்த கஃபே அருகே அமர்ந்திருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு குடும்பத்தினர் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு உணவு தொண்டையில் சிக்கி, மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர் சுவாசிக்க முடியாமல் தவிப்பதைப் பார்த்து குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் பதறிப்போய் உறைந்து நின்றனர்.

இதைப் பார்த்த செவிலியர், ஒரு நொடி கூட தாமதிக்காமல் அந்தப் பெண்ணை நோக்கி ஓடிச் சென்றார். மூச்சுத் திணறல் ஏற்படும்போது செய்யப்படும் முதலுதவியான ‘ஹேம்லிக் மேனுவர்’ (Heimlich Maneuver) முறையை அந்தப் பெண்ணுக்குச் செய்தார். சில நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு, தொண்டையில் சிக்கியிருந்த உணவு வெளியேறியது. இதனால் அந்தப் பெண் மீண்டும் இயல்பாகச் சுவாசிக்கத் தொடங்கினார்.

செவிலியரின் இந்தத் துரிதமான செயலால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டது. இதைப் பார்த்த அங்கிருந்தவர்களும், அந்தப் பெண்ணின் குடும்பத்தினரும் செவிலியருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

இவரது அர்ப்பணிப்பு உணர்வையும், சமயோசித புத்தியையும் பாராட்டும் விதமாக, அந்த மருத்துவமனை நிர்வாகம் அவருக்குச் சிறப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி பகிரப்பட்டு, “செவிலியர்கள் எப்போதுமே பணியில் தான் இருக்கிறார்கள்” என மக்கள் பாராட்டி வருகின்றனர்.