அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று (மே 13, 2026) பெய்ஜிங் சென்றடைந்தார். விமான நிலையத்திலேயே அவருக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 300-க்கும் மேற்பட்ட சீன இளைஞர்கள் அமெரிக்க மற்றும் சீனக் கொடிகளை அசைத்து “வரவேற்கிறோம்” என முழக்கமிட்டு அவரை வரவேற்றனர். ட்ரம்ப் அதிபரான பிறகு சீனாவுக்குச் செல்லும் முதல் பயணம் இது என்பதால், உலக நாடுகளின் பார்வை தற்போது பெய்ஜிங் மீது திரும்பியுள்ளது.

​இன்று (மே 14) தியனன்மென் சதுக்கத்தில் உள்ள ‘கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்’ (Great Hall of the People) அரங்கில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பயணத்தில் அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள், ஈரானுடனான போர்ச் சூழல், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் தைவான் விவகாரம் உள்ளிட்ட மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட உள்ளது. எலோன் மஸ்க், ஜென்சன் ஹுவாங் போன்ற முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் சி.இ.ஓ-க்களும் ட்ரம்ப்புடன் வந்துள்ளதால், சீனச் சந்தையை அமெரிக்க நிறுவனங்களுக்குத் திறந்துவிடுவது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.