சீனாவிற்கு ஈரான் நாட்டு எண்ணெய் விற்பனை செய்ய உதவியதாக 12 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா அதிரடித் தடையை விதித்துள்ளது. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை வெளிநாட்டு நிறுவனங்களைப் பயன்படுத்தி ரகசியமாக எண்ணெய் விற்று அந்தப் பணத்தை ஆயுதப் பெருக்கத்திற்கும், பயங்கரவாதச் செயல்களுக்கும் பயன்படுத்துவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இந்தப் புதிய தடையின்படி, ஹாங்காங் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த நிறுவனங்களின் அமெரிக்கச் சொத்துக்கள் முடக்கப்படும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் சீனா செல்லவிருக்கும் நிலையில், அந்நாட்டுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரானின் முக்கிய வர்த்தக கூட்டாளியான சீனா, சர்வதேசத் தடைகளை மீறி ஈரானிடம் இருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெயை வாங்கி தனது கையிருப்பை நிரப்பி வருகிறது. இதனைத் தடுக்கவே அமெரிக்கா இந்த ‘எகனாமிக் ஃபியூரி’ என்ற பொருளாதார அழுத்த நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீனா ஈரானுக்கு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்த உதவ வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது. ஏற்கனவே ஈரான் ராணுவத்திற்கு உதவியதாகச் சீன செயற்கைக்கோள் நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா சமீபத்தில் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
