நிழல் உலகத்தில் மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை நிரூபிக்கும் வகையில், பாரிஸின் செய்ன் நதியில் தவறி விழுந்த தெருநாய் ஒன்றை பொதுமக்கள் ஒன்றிணைந்து மீட்ட நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆழமான ஆற்றுப்பகுதிக்குள் நாய் விழுந்ததைக் கண்ட அங்கிருந்த மக்கள், எவ்வித முன்யோசனையுமின்றி உடனடியாகச் செயல்பட்டனர்.

மேலும் அந்த வாயில்லா ஜீவனைக் காப்பாற்ற ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்துக்கொண்டு ‘மனிதச் சங்கிலி’ ஒன்றை உருவாக்கினர். ஆற்றின் கரையில் இருந்து நாய் தத்தளித்துக் கொண்டிருந்த பகுதி வரை மக்கள் நீண்ட சங்கிலியாகத் தொங்கிய காட்சி பார்ப்பவர் நெஞ்சை நெகிழச் செய்கிறது.

“>

இந்தத் துணிச்சலான முயற்சியின் முடிவில், ஒரு நபர் ஆற்று நீருக்கு மிக அருகில் சென்று அந்த நாயை லாவகமாகப் பிடித்து மேலே தூக்கினார். நாய் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வரப்பட்டதும், அங்கிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் “மனிதநேயம் இன்னும் சாகவில்லை” என்பதற்கு உதாரணமாகத் திகழும் இந்த வீடியோ, தற்போது இணையத்தில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஆபத்துக் காலங்களில் சாதி, மதம், இனம் என எவ்விதப் பாகுபாடுமின்றி ஒரு ஜீவனைக் காப்பாற்ற மக்கள் காட்டிய இந்த ஒற்றுமை பலருக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.