தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அந்த உத்தரவு வெளியான முதல் நாளிலேயே 50 கடைகள் அதிரடியாக மூடப்பட்டுள்ளன. “காலை உத்தரவு.. மதியம் மூடல்” என்ற வேகத்தில் அதிகாரிகள் களமிறங்கி மதுக்கடைகளுக்குப் பூட்டுப் போட்டு வருகின்றனர். முதலமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கையால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

​குறிப்பாக, அதிகபட்சமாகக் கோவை மண்டலத்தில் மட்டும் 12 கடைகள் முதல் நாளில் மூடப்பட்டுள்ளன. சென்னை மற்றும் சேலம் மண்டலங்களில் தலா 10 கடைகளும், திருச்சி மற்றும் மதுரையில் தலா 9 கடைகளும் மூடப்பட்டுள்ளன. கோவை மண்டலத்தில் மட்டும் மொத்தம் 69 டாஸ்மாக் கடைகளை மூட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போலவே, மதுவிலக்கை நோக்கி முதலமைச்சர் விஜய் எடுத்து வரும் இந்த முதல் அடி தமிழக அரசியலில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.