இயக்குநர் பாபு விஜய் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கலந்துகொண்டு தனது பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

குறிப்பாக, ‘சர்கார்’ பட வெளியீட்டின் போது அரசியல் காரணங்களுக்காக போஸ்டர்கள் கிழிக்கப்பட்ட அந்த இக்கட்டான காலகட்டத்தில், பாபு விஜய் தன்னுடனேயே இருந்து ஆறுதலாக இருந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

“நானும் அவரும் காரில் அமர்ந்து கண்ணீர் மல்க அந்தச் சம்பவங்களைப் பார்த்தோம்; என்னுடைய மிக மோசமான காலத்தில் அவர் என்னுடன் இருந்தார்” என்று முருகதாஸ் உருக்கமாகத் தெரிவித்தார்.

மேலும், பாபு விஜயின் சமயோசித புத்தி மற்றும் திறமையைப் பாராட்டிய முருகதாஸ், பழ கருப்பையா தொடர்பான ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் குறிப்பிட்டார்.

பேட்டியின் போது பழ கருப்பையாவுக்கு என்ன பேச வேண்டும் என்று பாபு விஜய் சொல்லிக் கொடுத்த விதத்தையும், அதன் மூலம் அவர் முருகதாஸின் பெயரையே மறக்கும் அளவுக்குத் தனது பெயரைப் பதிய வைத்ததையும் வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.

“என்னிடம் பணியாற்றிய 12 உதவி இயக்குநர்கள் இயக்குநராகி உள்ளனர், இன்று பாபு விஜயின் நாள் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்து படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளை முருகதாஸ் பகிர்ந்து கொண்டார்.