உலகளாவிய பொருளாதார நெருக்கடி நிலவி வரும் சூழலில், இந்திய அந்நியச் செலாவணியைச் சேமிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றும், மெட்ரோ ரயில் வசதி உள்ள நகரங்களில் மக்கள் அதையே பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, திருமண நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் சரி, அடுத்த ஓராண்டு காலத்திற்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், நடுத்தர வர்க்கத்தினர் தங்களது வெளிநாட்டுப் பயணங்களை ஓராண்டிற்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது மற்றும் ரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை விவசாயத்திற்கு மாறுவது தேசத்தின் கருவூலத்தைக் காப்பதோடு ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா காலத்தில் பழகிய ‘வீட்டிலிருந்து வேலை’ (WFH) மற்றும் இணையவழி சந்திப்புகளுக்கு மீண்டும் முன்னுரிமை அளிப்பதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்றும் மோடி தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்த “தேசபக்தி பங்களிப்பு” குறித்த பேச்சு தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.