உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள ராயல் சிட்டி பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பெரும் சூதாட்ட நெட்வொர்க் முறியடிக்கப்பட்டது. இந்த சோதனையில் ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்கம், 11 லட்சம் மதிப்பிலான வெள்ளி மற்றும் 19 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சட்டவிரோத சூதாட்ட வழக்கில் யஷஸ்வி மற்றும் நிஷா கான் என்ற இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைதான யஷஸ்வி, உத்தரப்பிரதேச காவல்துறையில் காவலராகப் பணியாற்றும் ரஜத் என்பவரின் காதலி என்பது தெரியவந்துள்ளது. சோதனையின் போது போலீசாரைக் கண்டதும் முக்கிய குற்றவாளியான காவலர் ரஜத், தனது காதலியை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டார்.
கைதான யஷஸ்வியின் தாய் சுமன் கூறுகையில், “ரஜத் ஏற்கனவே திருமணமானவர். 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் இதனை மறைத்து, என் மகள் சிறுமியாக இருந்த போதே ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்துள்ளார். என் மகளும் ரஜத்தும் கடந்த 8 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். படிப்பில் மிகச் சிறந்தவளாக இருந்த என் மகளுக்கு, காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்பதே கனவாக இருந்தது. ஆனால் ரஜத்தின் காதல் மோகத்தால் அவளது வாழ்க்கையே இப்போது பாழாகிவிட்டது” என வேதனையுடன் தெரிவித்தார்.
திருமண நிச்சயதார்த்தம் வரை சென்றும், ரஜத்தின் மீதான நம்பிக்கையால் அதனை ரத்து செய்துவிட்டு அவருடன் சென்ற யஷஸ்வி, தற்போது சிறையில் உள்ளார். “உண்மையான காதலாக இருந்திருந்தால், ஆபத்தான நேரத்தில் அவளைத் தனியே விட்டுவிட்டு ரஜத் ஓடியிருக்க மாட்டான்” என யஷஸ்வியின் தாய் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
தப்பியோடிய காவலர் ரஜத்தை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பை வைத்துப் பார்க்கும்போது, இது மாநிலங்களுக்கு இடையேயான மிகப்பெரிய சூதாட்ட கும்பலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சட்டத்தை மீறும் காவல்துறை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜான்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
