புதுச்சேரியில் கடந்த 2024-ஆம் ஆண்டு 9 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு புதுச்சேரியில் 9 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் கடத்தப்பட்டார். இது குறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் அப்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கருணாஸ் (19) மற்றும் விவேகானந்தன் (59) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணைக் காலத்திலேயே மற்றொரு குற்றவாளியான விவேகானந்தன் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், எஞ்சியிருந்த முக்கிய குற்றவாளியான கருணாஸ் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி கருணாஸுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். சமூகத்தையே உலுக்கிய இக்கொடூரமான குற்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த உச்சபட்ச தண்டனை, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நீதி கிடைத்துள்ளதாகக் கருதப்படுகிறது.