ராமநாதபுரத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்த வடமாநிலப் பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அபர்ணா என்பவர், ராமநாதபுரம் போக்குவரத்து நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம் பீகாரிலிருந்து திரும்பிய அவர், தனது உதவியாளராக உறவினர் ரித்திக் என்பவரையும், ஒரு வளர்ப்பு நாயையும் அழைத்து வந்துள்ளார்.

மேலும் கடந்த சில நாட்களாக அபர்ணாவிடமிருந்து தகவல் ஏதும் இல்லாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வீட்டை உடைத்து உள்ளே சென்றபோது, அபர்ணா கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தார். அவரது வளர்ப்பு நாயும் கொல்லப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக அவருடன் தங்கியிருந்த உறவினர் ரித்திக் மீது போலீசார் சந்தேகம் கொண்டுள்ளனர். அபர்ணாவின் குடும்பத்தினருக்கு ரித்திக்கின் செல்போனில் இருந்து அபர்ணா சடலமாகக் கிடக்கும் புகைப்படம் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதனால் அவர் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் தனிப்படை அமைத்து அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால் மட்டுமே, எதற்காக அபர்ணா கொலை செய்யப்பட்டார்? மற்றும் இந்தக் கொடூரச் செயலுக்குப் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன என்பது குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.