சென்னை கிண்டியில் தனியாகத் தங்கி வேலை பார்த்து வரும் இளம்பெண்களுக்கு நேர்ந்த கொடூரமான அதிர்ச்சி சம்பவம் இப்போது அப்பகுதியையே அதிர வைத்துள்ளது. கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று அதிகாலை குளியலறைக்குச் சென்றபோது, ஜன்னல் வழியாக ஒரு மர்ம நபர் செல்போனில் வீடியோ எடுப்பதைக் கண்டு அலறியுள்ளார்.

பயந்து ஓடாமல் துணிச்சலாகச் செயல்பட்ட அந்தப் பெண், அந்த வாலிபரின் செல்போனைப் பறிக்க முயன்றபோது, அந்த நபர்  பெண்ணை ஆபாசமாகப் பேசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறான். ஆனால், அவசரத்தில் அவன் விட்டுச் சென்ற மற்றொரு செல்போன் தான் இப்போது அந்த நபரை கம்பி எண்ண வைத்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் கிண்டி போலீசார் மின்னல் வேக விசாரணை நடத்தியதில், பிடிபட்ட நபர் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த முல்லைநாதன் (31) என்பது தெரியவந்தது. நண்பர்களுடன் அதே பகுதியில் தங்கியிருந்த இவன், நீண்ட நாட்களாகவே பெண்கள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து ரசித்து வந்த கில்லாடி என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இதையடுத்து, முல்லைநாதனைப் பிடித்து உள்ளே தள்ளிய போலீசார், அவனிடமிருந்த 2 செல்போன்களையும் பறிமுதல் செய்து, அதில் ஏற்கனவே ஏதேனும் வீடியோக்கள் உள்ளதா? எனத் தீவிரமாகத் துப்புத் துலக்கி வருகின்றனர். சென்னையில் வாடகைக்குத் தங்கியிருக்கும் பெண்கள் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் பீதியையும், ஜன்னல்கள் மீதான பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.