தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று மீண்டும் ஆளுநரை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
நேற்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை (அர்லேகர்) சந்தித்த விஜய், த.வெ.க.வின் 108 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 113 உறுப்பினர்களின் ஆதரவுப் பட்டியலை வழங்கினார். இந்தப் பட்டியலைப் பெற்றுக்கொண்ட ஆளுநர், பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கட்டாயம் தேவை என்பதைச் சுட்டிக்காட்டினார். போதிய பலம் இல்லாத காரணத்தால், ஆட்சி அமைக்க உடனடியாக அனுமதி வழங்க ஆளுநர் மறுத்துவிட்டார்.
ஆளுநரின் இந்த முடிவால், இன்று திட்டமிடப்பட்டிருந்த விஜய்யின் முதலமைச்சர் பதவியேற்பு விழா தற்காலிகமாகத் தடைபட்டுள்ளது. இந்நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான கூடுதல் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் த.வெ.க இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டுள்ள விஜய், இன்று காலை மீண்டும் ஆளுநரை சந்தித்தார். அவருக்கு மட்டும் ஆளுநர் மாளிகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு மேலாக விஜய் ஆளுநரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் சட்டமன்றத்தில் தங்களுடைய பெரும்பான்மையை விஜய் நிரூபிக்க உள்ளதாக ஆளுநருக்கு வாக்குறுதி கொடுத்ததாக தெரிகிறது.
