பொது இடமான ஒரு வணிக வளாகத்திற்குள, கையில் பெரிய அளவிலான போர்ட்டபிள் ஸ்பீக்கரைத் தூக்கிக் கொண்டு, சத்தமாகப் பக்திப் பாடலை இசைத்தபடி ஒரு நபர் வலம் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகும் அந்த வீடியோவில், ஒரு நபர் தோளில் பெரிய ஸ்பீக்கரைச் சுமந்து கொண்டு மாலில் நடந்து செல்கிறார். அதில் பிரபலமான பக்தி பாடல் மிக அதிக சத்தத்துடன் ஒலிக்கிறது. அங்கிருந்த மக்கள் வியப்புடனும், சில இடங்களில் சங்கடத்துடனும் அவரைப் பார்க்கின்றனர். ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாத அந்த நபர், எஸ்கலேட்டரில் ஏறி அடுத்தடுத்த தளங்களுக்குச் செல்கிறார்.

 

இந்த வீடியோ ‘எக்ஸ்’ தளத்தில் பகிரப்பட்டபோது, ஒரு தரப்பினர் இது ‘உரிமை மற்றும் சுதந்திரம்’ என்று கொண்டாடினார். ஆனால், பெரும்பாலான நெட்டிசன்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “இது பக்தி அல்ல, பொதுமக்களுக்குத் தரும் இடையூறு. பக்திப் பாடல்களைக் கேட்க விரும்பினால் தனிப்பட்ட முறையில் இயர்போன் பயன்படுத்தலாம்; மற்றவர்கள் மீது கட்டாயமாகத் திணிப்பது அநாகரீகம்” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “இது போன்ற செயல்களால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுவதை ‘சுதந்திரம்’ என்று கூற முடியாது, இது ஒரு பொதுத் தொல்லை  என்று சாடியுள்ளார்.

மேலும் சமீபகாலமாக பொது இடங்களில் இது போன்ற செயல்கள் ஒரு ட்ரெண்டாக மாறி வருவது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.