தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளில், 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும் ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்படும் தவெக-வுக்கு ஆதரவளிப்பது குறித்துக் காங்கிரஸ் மேலிடம் தீவிரமாகக் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது.
தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் டெல்லிக்கு விரைந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோரைச் சந்தித்துத் தமிழக அரசியல் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனையை நடத்தியுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் கருத்துக்களை அறிக்கையாகச் சமர்ப்பித்த அவர், தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியுள்ளனர் என்றும், இளைஞர்களும் பெண்களும் தவெக பக்கம் திரும்பியுள்ளனர் என்றும் மேலிடத்திடம் எடுத்துரைத்தார்.
திமுக கூட்டணியிலிருந்து விலகித் தவெக தலைவர் விஜய்யின் புதிய அரசுக்கு ஆதரவு தெரிவிப்பது மற்றும் “ஆட்சியில் பங்கு” கேட்பது ஆகியவை குறித்து டெல்லியில் தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியல் சதுரங்க ஆட்டத்தில் காங்கிரஸின் இந்த மூவ் அடுத்தகட்ட பரபரப்பை எகிற வைத்துள்ளது.
