76 ஆண்டுகால திமுக மற்றும் 54 ஆண்டுகால அதிமுக ஆகிய பாரம்பரியக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தமிழகத்தின் புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது. நடைபெற்று முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தின் அனைத்து மண்டலங்களிலும் தவெக அபாரமாகச் செயல்பட்டு தனிப்பெரும் செல்வாக்கை நிரூபித்துள்ளது. வழக்கமாக திமுக-வின் கோட்டையாகக் கருதப்படும் வடக்கு மண்டலத்தில் தவெக பெரும் சரித்திரத்தை எழுதியுள்ளது. இது பற்றி விரிவாக பார்ப்போம்.

1. வடக்கு மண்டலம் (சென்னை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்டவை):

மொத்த இடங்கள் 69-ல் தவெக  43-ல் வெற்றி பெற்றுள்ளது. அதன்பிறகு அதிமுக 17 இடங்களிலும் திமுக 09 இடங்களிலும் வென்றுள்ளது.

2. மேற்கு மண்டலம் (கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்டவை):

அதிமுக-வின் பலமான கோட்டையாகக் கருதப்பட்ட கொங்கு மண்டலத்திலும் தவெக ஊடுருவியுள்ளது. மொத்த இடங்கள்: 61-ல்  தவெக 28-ல் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக: 22, திமுக: 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

3. மத்திய மண்டலம் (டெல்டா மாவட்டங்கள்):

திமுக-வின் இதயப் பகுதியான டெல்டாவில் கடும் போட்டி நிலவியது. மொத்த இடங்கள்: 46-ல்  திமுக கூட்டணி 24 இடங்களிலும்  தவெக: 12, அதிமுக: 10 இடங்களிலும் வென்றுள்ளது.

4. தென் மண்டலம் (மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்டவை):

தென் மாவட்டங்களில் திமுக-வுக்கும் தவெக-வுக்கும் இடையே இழுபறி நிலவினாலும், தவெக சமபலத்துடன் மோதியுள்ளது. மொத்த இடங்கள்: 58-ல் திமுக: 27 இடங்களிலும் தவெக: 26 அதிமுக: 05 இடங்களிலும் வென்றுள்ளது.

தமிழக அரசியலில் நீண்டகாலமாக வெற்றியைத் தீர்மானித்து வந்த சாதி ரீதியான வாக்கு வங்கி மற்றும் பணபலம் ஆகியவற்றை மீறி, விஜய்யின் ‘மாற்று அரசியல்’ மற்றும் இளைஞர்களின் ஆதரவு இந்தத் தேர்தலில் எதிரொலித்துள்ளது. குறிப்பாகத் தமிழகத்தின் நான்கு முக்கிய மண்டலங்களிலும் தவெக கணிசமான இடங்களை வென்றுள்ளது திராவிடக் கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகம் முழுவதும் தவெக-விற்கு அமோக ஆதரவு கிடைத்தாலும், குறிப்பிட்ட 8 மாவட்டங்களில் அக்கட்சியால் ஒரு இடத்தைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை.

அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், நீலகிரி மற்றும் விழுப்புரம் போன்றவைகளில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. குறிப்பாக, தவெக தனது முதல் மாநில மாநாட்டை மிகப்பிரம்மாண்டமாக நடத்திய விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியிலேயே தவெக தோல்வியைத் தழுவியுள்ளது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. எனினும், இந்த மாவட்டங்களில் தவெக வேட்பாளர்கள் பல இடங்களில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்து பலமான வாக்குகளைப் பெற்றுள்ளனர்.